ஸ்ரீ கேதாரீஸ்வரர் நோன்பு விரத புராணம்

காப்பு

Onlyscraps-Ganesh15

 

தாரனைய கூந்தற் கவுரி யியற்றியகே

தார விரதத்தை யான்படிக்க – சீரிலகும்

ஐந்துகரத்தந்திமுகத் தண்ணலடி யார்க்கருளுங்

கந்தமலர்ச் செஞ்சரேண காப்பு.

நூல்

                     ஆதி காலத்தில் கைலாயத்திலே நவரத்தினங்களாலிழைத்த சிம்மாசனத்தின் மீது பரமேஸ்வரரும் பார்வதி தேவியும் கொலுவீற்றிருக்கையில், பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தொண்ணாயிரம் ரிஷிகள், அஷ்ட வசுக்கள், கின்னர், கிபுருடர், கருடகாந்தருவர், சித்த வித்யாதரர், ஜனகஜனாநந்தர், ஜனத்குமாரர், தும்புருநாரதர், மற்றுமுண்டான தேவரிஷிகளும் பிரதிதினம் வந்து பரமசிவனையும், பார்வதி தேவியையும் பிரதக்ஷிண நமஸ்காரம் செய்துகொண்டு போவார்கள். இப்படியிருக்க, ஒருநாள் சமஸ்த தேவர்களும் ரிஷிகளும் வந்து ஈஸ்வரரையும்-ஈஸ்வரியையும் பிரதக்ஷிண நமஸ்கார தோத்திரஞ் செய்து செலவு பெற்றுக்கொண்டு தங்கள் எதாஸ்தானங்களுக்குப் போகிற சமயத்தில் பிருங்கி என்கிற ரிஷி ஒருவர் மாத்திரம் பார்வதி அம்மனை புறம்பாகத் தள்ளி, ஈஸ்வரரை மாத்திரம் பிரதக்ஷிண நமஸ்காரஞ் செய்து ஆனந்தக்கூத்தாடினார். நூல் ஆதி காலத்தில் கைலாயத்திலே நவரத்தினங்களாலிழைத்த சிம்மாசனத்தின் மீது பரமேஸ்வரரும் பார்வதி தேவியும் கொலுவீற்றிருக்கையில், பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள், 48 ஆயிர ரிஷிகள், அஷ்ட வசுக்கள், கின்னர், கிபுருடர், கருடகாந்தருவர், சித்த வித்யாதரர், ஜனகஜனாநந்தர், ஜனத்குமாரர், தும்புருநாரதர், மற்றுமுண்டான தேவரிஷிகளும் பிரதிதினம் வந்து பரமசிவனையும், பார்வதி தேவியையும் பிரதக்ஷிண நமஸ்காரம் செய்துகொண்டு போவார்கள்.

01-kailash

                     இப்படியிருக்க, ஒருநாள் சமஸ்த தேவர்களும் ரிஷிகளும் வந்து ஈஸ்வரரையும்-ஈஸ்வரியையும் பிரதக்ஷிண நமஸ்கார தோத்திரஞ் செய்து செலவு பெற்றுக்கொண்டு தங்கள் எதாஸ்தானங்களுக்குப் போகிற சமயத்தில் பிருங்கி என்கிற ரிஷி ஒருவர் மாத்திரம் பார்வதி அம்மனை புறம்பாகத் தள்ளி, ஈஸ்வரரை மாத்திரம் பிரதக்ஷிண நமஸ்காரஞ் செய்து ஆனந்தக்கூத்தாடினார். இதனால் பார்வதிதேவிக்கு மஹா கோபமுண்டாகி, பிரம்ம, விஷ்ணு, ருத்ரன், தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தொண்ணாயிரம் ரிஷிகளும், கின்னர், கிபுருடர், கருடகாந்தருவர், சித்த வித்யாதரர், ஜனகஜனாநந்தர், ஜனத்குமாரர், தும்புருநாரதர், கெளதமர், அகஸ்தியர் மற்றுமுண்டான தேவர்களும் வந்து ஈஸ்வரரையும் நம்மையுங் கண்டு வணங்கிப் போகின்றனர். இந்த பிருங்கி மஹரிஷி நம்மை புறம்பாகத் தள்ளி ஈஸ்வரரை மாத்திரம் நமஸ்கரித்து நின்றானே என்ற கோபத்துடனே பரமேஸ்வரி கேட்க, பரமேஸ்வரர் சொல்லுகிறார் – “பர்வத ராஜ குமாரியே, பிருங்கி ரிஷி பாக்கியத்தைக் கோரினவனல்ல; மோக்ஷத்தைக் கோரினவனான படியால் எம்மை மாத்திரம் பிரதக்ஷிண நமஸ்காரஞ் செய்தான்” என்று கூறினார். பரமேஸ்வரி பிருங்கி ரிஷியைப் பார்த்து, “ஓய்! பிருங்கி ரிஷியே, உன் தேகத்திலேயிருக்கிற ரத்த மாமிசம் நம்முடைய கூறாச்சுதே, அவைகளை நீ கொடுத்துவிடு!” என்று சொல்ல, பிருங்கி ரிஷியும் தனது தேகத்திலிருந்து ரத்த மாமிசங்கைள உதறிவிடுகிறார்.

                    இதனால் பிருங்கி மஹரிஷி நிற்கமுடியாமல் தவிக்கக் கண்ட ஈஸ்வரன், “ஏ பிருங்கி மஹா ரிஷியே, ஏன் அசக்தனானாய்?” என்று கேட்க, பிருங்கி பரமனை வணங்கி, “பரமேஸ்வரா, அம்பிகையை நீக்கி தங்களை மட்டும் வணங்கினதால் அம்பிகை கோபித்து அடியேனுக்களித்த தண்டனை இது” என்று கூற, பரமேஸ்வரன் மனமிறங்கி ஒரு தண்டை கொடுக்க, பிருங்கி மஹாரிஷி தண்டை ஊன்றிக்கொண்டு மறுபடியும் பரமேஸ்வரரை நமஸ்கரித்துவிட்டு ஆசிரமத்திற்கு எழுந்தருளினார். பிறகு பரமேஸ்வரி பரமேஸ்வரரைப் பார்த்து – “நீர் என்னை உபேக்ஷை செய்யலாமோ? இனி எனக்கு காரியமென்னவென்று கைலாயத்தை விட்டு பூலோகத்தில் வால்மீக மஹரிஷி சஞ்சரிக்க நின்ற பூங்காவனத்தில் ஒரு விருக்ஷத்தினடியில் எழுந்தருளியிருந்தாள்.

swan

                    அத்திசையில் பன்னிரெண்டு ஆண்டு மழையின்றி உலர்ந்து வாடியுமிருந்த விருக்ஷங்களெல்லாம் துளிர்த்துத் தழைத்து, புஷ்பித்து, காய்த்தும் பழுத்து இன்னும் அநேக பூச்செடிகளெல்லாம் மல்லிகை, முல்லை, கோங்கு, இருவாக்ஷி, மந்தாரை, பாரிஜாதம், வில்வம், பத்தி, துன்பம் மற்று முண்டான சகல ஜாதி புஷ்பங்களும் விஸ்தாரமாய் புஷ்பித்து பரிமளித்து சுற்றிலும் நாலு யோஜனை விஸ்தீரணம் பரிமளம் வீசினது. அந்தச் சமயத்தில் வால்மீக மஹாரிஷி தம் பூங்காவனத்தைப் பார்த்து அதிசயப்பட்டு, பன்னிரெண்டு வருஷம் மழையில்லாமல் உலர்ந்திருந்த விருக்ஷங்களெல்லாம் இப்பொழுது துளிர்த்துப் புஷ்பித்துக் காய்த்துப் பழுத்திருக்கின்ற ஆச்சர்யம் என்னவோ கெரியவில்லை என்று மனதில் நினைத்துக்கொண்டு பூங்காவனத்திற்கு வந்தார். வந்தவர் சகல புவன கர்த்தாவாகிய பரமேஸ்வரன், பரமேஸ்வரி, பிரம்மா, விஷ்ணு வந்திருக்கிறார்களோ, அவர்கைளக் காணேவண்டுமென்று அந்த வனத்திலெல்லாம் சுற்றி ஆராய்ந்து பார்க்கையில், ஸ்ரீ பார்வதி தேவி ஒரு வில்வ மரத்தினடியில் எழுந்தருளியிருக்கக் கண்டு, “மூவருக்கும் முதன்மையான தாயே, முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஒப்பற்ற தெய்வமாய் நின்ற பராசக்தியான ஈஸ்வரியே! நான் எத்தனை கோடி தவஞ்செய்தேனோ, இந்த பூங்காவனத்திலே எனக்குக் காக்ஷி கொடுக்க கைலாயத்தைவிட்டு பூலோகத்திற்கு நீர் எழுந்தருளின தென்னவோ வென்று மிகவும் வினயமுடன் தோத்திரஞ் செய்து வந்தகாரணத்தை அடியேனுக்கு திருவுளம் பற்றவேண்டுமென்று வால்மீக முனிவர் கேட்க, பார்வதி தேவியார், “வால்மீகி முனிவரே, ஸ்ரீ கைலாயத்திலே பரமேஸ்வரரும் நாமும் ஒரு நவரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருக்கையில் பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரன் முதலான தேவர்களும் மற்றுமுண்டான மஹா ரிஷிகளும் வந்து இருவரையும் நமஸ்கரித்துப் போவார்கள். பிருங்கிமுனி சுவாமியை மாத்திரம் நமஸ்கரித்து நம்மைப் புறம்பாகத் தள்ளினான். அப்போது இவனா நம்மை புறம்பாகத் தள்ளுகிறவனென்று கோபத்துடன் என் கூறான ரத்த மாமிசத்தை வாங்கிக்கொண்டேன். அப்போது பரமேஸ்வரர் அவனுக்கு ஒரு தண்டு கொடுத்தார். இப்படி செய்யலாமோவென்று கேட்டதற்கு அவர் மறுமொழி சொல்லவில்லை. ஆகையால் நமக்குக் கோபம் பிறந்து பூலோகத்திற்கு வருகிற பொழுது இந்த பூங்காவனத்தைக் கண்டு, இங்கே தங்கினோம்” என்று பார்வதியம்மை வால்மீகருக்கு உரைத்தாள். வால்மீக மஹரிஷி தனது ஆசிரமத்திற்கு எழுந்தருளுமாறு அன்மையை வேண்ட, அம்பிகையும் அவரிஷ்டப்படியே எழுந்தருளினாள்.

ambal-comming

                    முனிவர் அம்மனிருக்க ஓர் ஆசிரமமும், ஒரு நவரத்தின சிம்மாசனமும் உண்டுபண்ணி, அந்த சிம்மாசனத்தின் மீது எழுந்தருளின பின் பரமேஸ்வரி வால்மீக முனிவரைப் பார்த்து, “ஓ தபசியே! இந்த பூலோகத்தில் நான் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். நூதனமும் மேலானதுமான விரதம் ஒன்றிருக்குமாயின் அதை எனக்கு சொல்ல வேண்டும்.” என்று கேட்க, வால்மீக முனிவர் தொழுது, “தாயே, லோக மாதாவே, அபிராமியே, திரிபுர சம்ஹாரி,கெளரவ கைலாச வாசகி, விபூதி ருத்ராக்ஷி, க்ருபா சமுத்ரி, க்ருபானந்தி, வேதஸ்வரூபி, உம்முடைய சன்னிதானத்திலே அடியேன் ஒரு விண்ணப்பஞ் செய்கிறேன். கோபமில்லாமல் கேட்டு திருவுளம் பற்றவேண்டும்” என்று சொல்ல, அதென்னவென்று அம்பிகை கேட்க, “ஜெகத் ரக்ஷகியே, இந்த பூலோகத்தில் ஒருவருக்கும் தெரியாத ஒரு விரதமுண்டு. அந்த விரதத்திற்கு கேதாரீஸ்வரர் நோன்பென்று பெயர். அதை இதுவரையில் யாரும் அனுஷ்டிக்கவில்லை. நீர் அந்த விரதத்தை அனுஷ்டித்தால் இஷ்ட சித்தியாகும்” என்று சொன்னார். அதைப் பரமேஸ்வரி கேட்டு, “அந்த விரதம் எக்காலத்தில் எவ்விதமாக அனுஷ்டிக்க வேண்டுமென்பதை விபரமாகச் சொல்ல வேண்டும்” என்று கேட்க வால்மீகர் சொல்லுகிறார்: “புரட்டாசி மாதம் சுக்கில பட்சம் தசமி திதி தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரைக்கும் 21 நாள் பிரதி தினம் ஸ்நானஞ் செய்து, சுத்த வஸ்திரமணிந்து ஆல விருட்சத்தின் கீழ் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகஞ் செய்து, விபூதி சந்தனாக்ஷதை, புஷ்பஞ்சாத்தி, வெல்லவுருண்டை, சந்தனவுருண்டை, மஞ்சளுருண்டை, அதிரசம், வாழைப்பழம், தேங்காய், பாக்கு, வெற்றிலை இதுகளை வகைக்கு ஒன்றாக வைத்து நமஸ்கரித்து இருபத்தோரிழையிலே ஒரு கயிறு முறுக்கி அதைத் தினந்தோறும் ஒரு முடியாக இருபத்தோரு நாள் முடிந்து, தினமும் உபவாசமிருந்து, நைவேத்தியஞ் செய்த அதிரசத்தையுமுண்டு இருபத்தோரு நாளும் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், இருபத்தோராம் நாள் தீபாவளி அமாவாசை தினம் பரமன் ரிஷபாரூடராய் காக்ஷியளித்து கேட்ட வரத்தையுங் கொடுப்பார்”

flow-show

என்று வால்மீகர் சொல்லக் கேட்ட அம்பிகை மகிழ்ந்து அதே பிரகாரம் ஐப்பசி மாதம் சுக்கில பக்ஷம் தசமி தொடங்கி, அமரபட்சமும் சதுர்த்தி அமாவாசை வரை இருபத்தொருநாளும் வால்மீகர் அறிவித்தபடி நியமநிஷ்டையுடன் உபவாசமிருந்து விரதம் அனுஷ்டிக்க, பரமேஸ்வரியின் விரதத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், தேவகணங்கள் புடைசூழ காக்ஷியளித்து, இட பாகத்தைப் பரமேஸ்வரிக்குக் கொடுத்து, அர்த்தநாரி ஈஸ்வரராக கைலாயத்திற்கெழுந்தருளி வீற்றிருந்தார். dharshan                     இவ்விரதத்தின் மேன்மையைக் கண்ட தேவர்கள், ரிஷிகள் முதலானவர்களும் அன்று முதல் இந்த விரதத்தை அனுஷ்டித்து வரலாயினர். தேவ கன்னியர் அவ்விரதத்தை கங்கைக் கரையில் அனுஷ்டிப்பதை பூலோகத்திலே ஓர் அரசனுடைய குமாரத்திகளான புண்ணியவதி – பாக்கியவதி எனும் இரு பெண்கள் தன் தகப்பன் நாடு நகரிழந்ததன் பயனாய் விவாகமாகாத கன்னியர் கங்கைக் கரை வர, அச்சமயம் தேவ கன்னியர் இயற்றும் பூசனையைக் கண்டு அதன் விபரமறிந்து, தேவ மங்கையர் கொடுத்த நோன்பு கயிற்றையும் பிரசாதத்தையும் பெற்று வீட்றிக்குப்போக, வீடு அடையாளந் தெரியாமல் குச்சு வீடு மாடமாளிகையாக மாறி அஷ்ட ஐஸ்வர்யம் பெருகியிருக்கும் புதுமையைக் கண்டு ஆச்சர்யமடைந்து நிற்கையில், தகப்பன் தனது குமாரத்திகளை அழைத்துச் சென்று சுகமே வாழ்ந்துவரும் நாளில், இராஜகிரி அரசன் புண்ணியவதியையும், அழகாபுரி அரசன் பாக்கியவதியையும் மணந்து தத்தம் பகுதிகளுக்குச் சென்று புத்திய பாக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். இங்ஙனம் வாழ்ந்துவரும் நாளில் பாக்கியவதி தன் கையில் அணிந்திருந்த நோன்பு கயிற்றை அவரைப் பந்தலின் மேல் போட்டுவிட்டு மறந்து போனதன் விளைவாக பாக்கியவதியின் நாட்டை வேற்றரசன் கைப்பற்றிக் கொண்டு இவர்களை ஊரை விட்டே துரத்தி விட்டான். பாக்கியவதியும் அவன் புருஷனும் நித்திய தரித்திரர்களாகி, உண்ண உணவும், உடுக்க உடையுமின்றிருக்கையில், நோன்புக் கயிறு அவரைப்பந்தலிலிருந்ததால் அவரைக்காய் மிகுதியாய்க் காய்க்க, பாக்கியவதி அந்த அவரைக்காய்களை சமைத்துப் புசித்து ஜீவித்து வந்தனர். இப்படியிருக்கையில் ஒருநாள் பாக்கியவதி தன் குமாரனையழைத்து, அப்பா நாம் நாடு நகரமிழந்து உண்ண உணவுக்கும், உடுக்க ஆடைகளுக்கும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆகையால் நீ இராஜகிரிக்குப் போய்,உன் பெரிய தாயான புண்ணியவதி சகல ஐஸ்வர்யத்துடனும் வாழ்வதால் அவளிடத்தில் நம்முடைய தற்கால நிர்வாகத்தைத் தெரிவித்து, கொஞ்சம் திரவியம் கேட்டு வாங்கிக் கொண்டு வா என்று சொல்லி, கட்டமுது கட்டிக்கொடுத்து வழிகூட்டியனுப்பினாள். அந்தப் பிள்ளை இராஜகிரிக்குப் போய், தன் பெரிய தாயாரைக் கண்டு தங்கள் வர்த்தமானங்களைச் சொல்ல, தாபந்திரியப்பட்டு பிள்ளையை நாலு நாள் வைத்திருந்து சில வஸ்திரங்களும் ஆபரணமும் திரவிய முடிப்பும், கட்டமுதும் கட்டிக்கொடுத்து அனுப்பினாள். அதை வாங்கிக்கொண்டு சில தூரம் வந்து ஒரு குளக்கரையில் மூட்டையை வைத்துவிட்டு கட்டமுது சாப்பிடுகிற சமயத்திலே மூட்டையை கருடன் எடுத்துக் கொண்டு போய்விட்டது.

eagle1 அதுகண்ட சிறுவன் மனஸ்தாபப்பட்டு, மீண்டும் பெரிய தாயாரிடஞ் சென்று நடந்ததைச் சொல்ல, அவள் விசனப்பட்டு, மறுபடியும் சில திரவியங்களைக் கட்டிக்கொடுத்தனுப்பினாள். அதை எடுத்தக் கொண்டு வரும்போது வழியிலே ஒரு திருடன் வந்து சிறுவனிடமிருந்து மூட்டையைப் பறித்துக்கொண்டு போய்விட, சிறுவன் துக்கப்பட்டுக்கொண்டே மறுபடியும் பெரிய தாயாரிடம் சென்று, அம்மா நாங்கள் செய்த பாவம் என்னவோ தெரியவில்லை. இரண்டாவதாகக் கொடுத்த திரவியங்களையும் திருடன் பறித்துக் கொண்டு போய்விட்டான் என்று சொல்லி வருந்தும் சிறுவனைத் தேற்றி, குழந்தாய் உன் தாயார் கேதாரி ஈஸ்வரர் விரதத்தை அனுஷ்டித்து வருகிறாளா? இல்லையா? என்று கேட்க, அந்த நோன்பு விரதத்தை அனுஷ்டிக்கிறதில்லை. முன்னே நோற்ற கயிற்றையும் அவரைப் பந்தலின் மேல் போட்டுவிட்டாள். அன்று முதல் இவ்வித கஷ்டங்களெல்லாம் வந்ததென்று தெரிகிறது என்று கூறினான். இதைக் கேட்ட புண்ணியவதி மிகவும் மனம் வருந்தி ஐப்பசி மாதம் வருந்தனிலும் சகோதரி குமாரனை தன்னிடமே நிறுத்திக்கொண்டு ஐப்பசிமாதம் தான் நோற்கிற நோன்போடு கூட பாக்கியவதிக்கும் ஒரு பங்கு வைத்து நோற்று அந்த நோன்புக்கயிறும் பலகாரமும் பாக்கு வெற்றிலையும், மஞ்சளும் இன்னும் சில ஆடையாபரணங்களும் திரவியமும் கொடுத்து காவலாக சேவகரையுங் கூட்டி இனிமேலாவது இந்த நோன்பை விடாமல் நோற்கச் சொல்லி சில புத்திமதிகளையும் சொல்லியனுப்பினாள். பெரியதாயாரிடம் விடைபெற்று வரும் போது முன்னே வழியில் பறித்துப்போன திருடன் திரவியத்தை கொடுத்துச் சென்றான். கருடனும் மூட்டையை கொண்டுவந்து போட்டுவிட்டு உன் தாய் கேதாரீஸ்வரர் நோன்பு விரதத்தை விட்டு விட்டதனாலேயே இவ்விதம் வந்தது. இனிமேல் பயபக்தியுடன் நோன்பு நோற்கச் சொல் என்று சத்தம் உண்டாக்க, சிறுவன் ஆச்சர்யப்பட்டு பயபக்தியுடனும் சந்தோஷத்துடனும் தன் வீட்டுக்கு வந்து தாயின் கையில் பெரிய தாயாரால் கொடுக்கப்பட்ட நோன்புக் தோரணத்தையும் பலகாரத்தையும் முன்னே கொடுத்து, பிறகு தனத்தையும் கொடுத்து நடந்த சவிஸ்தாரங்களையுஞ் சொல்லக் கேட்ட பாக்கியவதி,”மெய்தான். என் ஆங்காரத்தினால் கெட்டேன்” என்று சொல்லி ஸ்நானஞ் செய்து கேதாரி ஈஸ்வரரை நமஸ்காரஞ் செய்து கயிற்றை வாங்கிக் கட்டிக் கொண்டாள். அந்த நாழிகைக்கே தங்கள் பட்டணத்தைப் பிடுங்கிக் கொண்ட அரசன் பட்டணத்தையும், யானை சேனை பரிவாரங்கைளயும் பண்டி பண்டாரங்களையும். பகுதியும் கொடுத்துப் போய்விட்டான். பிறகு முன் போலவே பாக்கியவதிக்கு அஷ்ட ஐஸ்வர்யமும் உண்டாகவே, தான் முன் நோற்கத் தவறினபடியாலே கேதாரீஸ்வரர் வறுமையைத் தந்தார் என்று அறிந்து அன்று முதல் நோன்பைக் கைப்பற்றியதால் சகல சம்பத்தும் பெருகிச் சுகபோகத்தோடு வாழ்ந்து வந்தாள். ஆதலால் இப்பூலோகத்தில் கேதாரி விரதத்தை மனப்பூர்வமாக விரும்பிச் செய்பவர்களுக்குப் பரமேஸ்வரன் சகல செல்வங்களையும் அனுக்கிரகிப்பார். அன்பர்கள் இந்த நோன்பை பக்தி விநயத்தோடு செய்து சுக க்ஷேமங்களை அடைந்து மேன்மையாக வாழ்வீர்களாக. சுபம்! சுபம்!! சுபம்!!!

subam

Advertisements

கேதாரீஸ்வரர் பூஜா விதி

deeparathana-01

பூஜை ஆரம்பத்தில் மஞ்சளால் ஆன விநாயகரை செய்வித்து, கந்தம், புஷ்பம், அருகு சாற்றி, நோன்பு விரதக்காரர்கள் கையில் புஷ்பம் கொடுத்து விநாயகரை அர்ச்சனை செய்விக்க வேண்டியது.

அதற்கு மந்திரங்களாவன:

                     ஓம் சுமுகாய நம:

                    ஓம் ஏகதந்தாய நம:

                    ஓம் கபிலாய நம:

                    ஓம் கஜகர்ணிகாய நம:

                    ஓம் லம்போதராய நம:

                    ஓம் விகடாய நம:

                    ஓம் விக்நராஜாய நம:

                     ஓம் விநாயகாய நம:

                    ஓம் தூமகேதவே நம:

                    ஓம் கணாத்யக்ஷாய நம:

                    ஓம் பாலச்சந்திராய நம:

                     ஓம் வக்ரதுண்டாய நம:

                    ஓம் சூர்ப்பகர்ணாய நம:

                    ஓம் ஹேரம்பாய நம:

                     ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:

                    ஓம் மஹா கணாதிபதயே நம:

மேற்கண்ட சோடஷ நாமங்களையோதி, நானாவித பத்ர, புஷ்பமிட்டு, தூபம் ஆக்ராபயாமி, தீபம் தர்ஷயாமி என்று சொல்லி தூப தீபம் கொடுத்து, தக்ஷணை தாம்பூலம் நைவேத்தியம் வைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.

இப்போது ஸ்ரீ கேதாரீஸ்வரரை ஆவாஹனம் செய்ய வேண்டும். அம்மியையும் – குழவியையும் அலங்கரித்து, அம்மியின் மீது குழவியை நிறுத்தி, குங்குமம், கந்தம் முதலிய பரிமள திரவியங்களை அணிவித்து, பருத்தி மாலையிட்டு, புஷ்பம் சாற்றி, அதனெதிரில் கலசம் நிறுத்தி, அதற்கும் பருத்தி மாலையும், புஷ்பமும் சாற்றி, நோன்பு விரதம் அனுஷ்டிப்பவர்களை அருகே அமரச் செய்ய வேண்டும்.

விரதம் அனுஷ்டிப்பவர்கள் ஸ்ரீ கேதாரீஸ்வரரை மனதிலே தியானித்து, காசி கங்கா தீர்த்தங்களிலே திருமஞ்சனமாட்டியது போலும், பட்டு பீதாம்பரம் ஆபரணாதிகளால் அலங்கரித்தது போலும் மனதில் சங்கல்பம் செய்து கொள்ளச் சொல்லி, வில்வம், தும்பை, கொன்றை ஆகிய மலர்களினால் ஈஸ்வரரை அர்ச்சனை செய்யச் சொல்ல வேண்டும்.

அதற்கு மந்திரங்களாவன:

                    ஓம் சிவாய நம:

                     ஓம் கேசவாய நம:

                    ஓம் ருத்ராய நம:

                    ஓம் சங்கராய நம:

                     ஓம் கங்காதராய நம:

                     ஓம் கைலாசவாசாய நம:

                     ஓம் மழுவேந்திராய நம:

                     ஓம் சதாசிவாய நம:

                    ஓம் அச்சுதாய நம:

                     ஓம் நிர்மலாய நம:

                     ஓம் அரூபாய நம:

                     ஓம் ஆனந்தரூபாய நம:

                     ஓம் கோவிந்தாய நம:

                    ஓம் சூலபாணியே நம:

                     ஓம் நீலகண்டாய நம:

                     ஓம் நாராயணாய நம:

                     ஓம் கிருஷ்ணாய நம:

                    ஓம் பத்மநாபாய நம:

                    ஓம் ஈசாந்தியாய நம:

                    ஓம் சிவபூஜாய நம:

                    ஓம் காலகண்டாய நம:

                    ஓம் கபாலமூர்த்தயே நம:

                    ஓம் பரமகுருவே நம:

                    ஓம் சாந்த ருத்ராய நம:

                     ஓம் சாந்த ரூபாய நம:

                    ஓம் மார்கண்டாய நம:

                    ஓம் திரிபுர தஹனாய நம:

                    ஓம் தாமோதராய நம:

                     ஓம் பார்வதி ப்ராணேஷாய நம:

                     ஓம் சற்குருவாய நம:

                     ஓம் நந்திகேஸ்வராய நம:

                    ஓம் கேதாரீஸ்வராய நம:

அர்ச்சனை முடிந்த பிறகு, நோன்பு அனுஷ்டிப்பவர்கள் கையில் அக்ஷதை, புஷ்பம் கொடுத்து மும்முறை பிரதக்ஷிண செய்யச்சொல்லி கையிலுள்ளவற்றை சுவாமியின் மீது போடச் சொல்லவும்.

இறுதியில் கற்பூர தீபாராதனை காட்டி, நைவேத்தியமும், தாம்பூலமும் சமர்ப்பித்து தீபங்காட்டி, அவர்களுக்கு நோன்புக்கயிறும், புஷ்பமும், அக்ஷதையும் கொடுத்து ஆசீர்வாதம் செய்யவும்.

அவர்கள் நோன்புக் கயிற்றை கட்டிக் கொண்டு, அக்ஷதையை சிரசின் மீது போட்டுக் கொள்ள வேண்டும். அன்பர்கள் கேதாரீஸ்வரர் நோன்பை முறைப்படி அனுஷ்டித்து எல்லா நலனும் பெற வேண்டி விழைகிறோம்.

நன்றி!

பின்னூட்டங்களை lalithlearns@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.